Saturday, March 25, 2006

Thursday, January 05, 2006

உயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்

உயிர்மை பதிப்பகம் 2006ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இரண்டு பெரும் புத்தக வெளியீட்டு விழாக்களை ஜனவரி 6-7தேதிகளில் அடுத்தடுத்த தினங்களில் நடத்தவிருக்கிறது.

ஜனவரி 6 அன்று மாலை சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில்(·பிலிம் சேம்பர், 605 அண்ணா சாலை, சென்னை) மாலை ஆறு மணிக்கு சுஜாதாவின் பத்துப் புத்தகங்கள் ஒரே மேடையில் வெளிடப்படுகின்றன. சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், திரைக்கதை பயிற்சிப் புத்தகம், சுஜாதாவின் நாடகங்கள்(முழுத் தொகுப்பு), சுஜாதாவின் மர்மக் கதைகள் (முழுத் தொகுப்பு), சுஜாதா பதில்கள்(இரண்டாம் பாகம்), புதிய நீதிக் கதைகள் ஆகிய புதிய நூல்களுடன் ரத்தம் ஒரே நிறம், வஸந்த் வஸந்த், வண்ணத்துப் பூச்சி வேட்டை, திருக்குறள் புதிய உரை ஆகிய நூல்கள் மறுபதிப்பாகவும் வெளிவருகின்றன.

இவ் விழாவில் வைரமுத்து, இயக்குனர் ஷங்கர், ரா.கி.ரங்கராஜன், ஜெயமோகன், மதன், கு.ஞான சம்பந்தன், வாஸந்தி, திலகவதி, சுதாங்கன், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நூல்கள் குறித்து சிறப்புரையாற்றுகின்றனர்

ஜனவரி 7ஆம் தேதி மாலை சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 10 நவீன எழுத்தாளர்களின் பத்து நூல்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'விழித்திருப்பவனின் இரவு', ஜெயமோகனின் 'ஆழ்நதியைத் தேடி', ஜீ. முருகனின் 'சாம்பல் நிற தேவதை', கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' (நாட்டுப் புற பாலியல் கதைகளின் தொகுப்பு), மணாவின் 'தமிழகத் தடங்கள்', மு. சுயம்புலிங்கத்தின்' நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்', எம்.யுவனின் 'கை மறதியாய் வைத்த நாள்', 'கு.அழகிரிசாமி கடிதங்கள்' (கி.ராவுக்கு எழுதியது), பிரேம் ரமேஷின் 'உப்பு', அ.ராமசாமியின் 'பிம்பங்கள் அடையாளங்கள்' ஆகிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.

நூல்களை பி.ஏ.கிருஷ்ணன், யுவன் சந்திர சேகர், நாஞ்சில் நாடன், பிரேம், ஆர்.நல்லக்கண்ணு, சுகுமாரன், பாவண்ணன், பிரபஞ்சன், ஞானக்கூத்தன், எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு உரையாற்றுகின்றனர்.
விழா குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் அழைக்கலாம். 044-24993448.

இவ்விழாவில் வெளியிடப்படும் நூல் போக சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எஸ். ராமகிருஷ்ணனின் புதிய நாவலான 'உறுபசி', ஜெயமோகன் எழுதிய பேய்க்கதைகள் தொகுப்பான 'நிழல்வெளிக் கதைகள்' லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த 'அன்னா அக்மதோவா கவிதைகள்' உள்ளிட்ட பல நூல்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.

சென்னை புத்த்க கண்காட்சியில் உயிர்மை பதிப்பக ஸ்டால் எண்: s12.

நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Tuesday, April 12, 2005

திரைகடல் தாண்டி (தளும்பல்)

Image hosted by Photobucket.com

தளும்பல்
கட்டுரைகள்
ஆசிரியர் : சு. கி. ஜெயகரன்
பக்கம்:128. விலை:ரூ 60
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

நூலைப் பற்றி

லெமூரியா எனும் ஆரியப் புனைவு மற்றும் குமரிக்கண்ட கோட்பாடு பற்றியும் காம்பே வளை குடா புராதனச் சிதைவுகள் பேரூர் மண்ணோடுகள் பற்றியும் இந்நூல் கேள்விகளை எழுப்புகிறது. கவிதைகளில் துவங்கி காவியக்காலம் பற்றிய ஆய்வில் முடியும் இத்தொகுப்பு தமிழ் மொழி மற்றும் தமிழ் சார்ந்த கலாச்சாரம் குறித்த ஒரு புதிய பரிமாணத்தைக் காண வழிகோலுகின்றது

ஆசிரியரைப் பற்றி:

சு. கி. ஜெயகரன்
தாராபுரத்தில் 1946இல் பிறந்த சு. கிறிஸ்டோபர் ஜெயகரன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் இங்கிலாந்து, லஃப்பரோ பல்கலைக்கழகத்தின் நிலத்தடி நீர் ஆய்வுத் துறையில் சான்றிதழ் பட்டத்தையும் பெற்றவர். தன்சீனியா அரசின் நிலத்தடிநீர் ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர், காமன்வெல்த் செயலகத்திற்காகச் சியாராலியோனிலும் இதே பணியை ஆற்றியுள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் பாப்புவா நியுகினி முதலிய நாடுகளில் பணியாற்றிவிட்டு ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்காக ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது பணிபுரிகின்றார். ஜப்பானிய மொழியையும், ஆப்பிரிக்க மொழிகளான கிரியோல், ஸ்வாஹிலி ஆகிய மொழிகளையும் அறிந்துள்ள ஜெயகரன், வரலாற்றுக்கு முற்பட்ட தொல்லியல், ஆதிமனிதக் குடியேற்றம், தமிழின வரலாறு முதலிய துறைகளில் ஆர்வம் கொண்டவர். இந்திய, வெளிநாட்டு ஆய்விதழ்களில் இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதற்குமுன் எழுதிய நூல்கள் : மூதாதையரைத் தேடி (1991, கிரியா), குமரி நில நீட்சி (2003, காலச்சுவடு.)

புத்தகத்திலிருந்து:

திரைகடல் தாண்டி

எந்த நாட்டிலும் இல்லாத அளவு மக்கள் பாரத பூமியை விட்டு அக்கரை செல்கின்றனர். எத்தனை கரைகள் உள்ளனவோ, அத்தனை வகை அக்கரைவாழ் இந்தியர்கள் உண்டு. அவர்களுடைய வயது, பால், பட்டம், இதர தகுதி, சென்ற நாடு, செய்யும் வேலை அல்லது வியாபாரம், முதலீடு, சென்றதின் நோக்கம், முதலியனவற்றின் அடிப்படையில் அவர்களைப் பலவாறாகப் பிரிக்கலாம்.

வயதின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால், மிகவும் சிறியவர் கள், அரபுநாடுகளுக்கு ஒட்டகஓட்டிகளாகச் செல்லும், 6, 7 வயது கொண்ட இந்தியச் சிறுவர்கள் ஒட்டகங்கள் விரைந்து ஓட, ஒட்டகஓட்டி எடை குறைந்தவனாக இருப்பது அவசியம் என்பதால் சிறுவர்கள் இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒட்டகங் களில் அமர்த்தி அவற்றின் முதுகுடன் கட்டப்பட்ட சிறுவர்களின் கதறல் கேட்டு மிரண்டு சில சமயங்களில் ஒட்டகங்கள் ஓடுமாம். வறுமைக்கோட்டில் இருந்து தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும் மீட்க நினைக்கும் தொழிலாளிகள், தாதியர் முதலியோரின் இலக்கு எண்ணெய் வளநாடுகள். சுகவாழ்வு பற்றி கனவு காண்பவர் அதை நனவாக்க பணம்தேடி பாரசீக வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்ய செல்கின்றனர். இவர்களில் பலர் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்; கை நாட்டுக்காரர்கள். இவர்களில் அறுபது சதவீதத்தினர் எண்பதுகளில் பெற்ற மாதவருமானம் ரூபாய் இரண்டாயிரத்தில் இருந்து ரூபாய் ஐந்தாயிரம் வரை. அக்கரையில் இறங்கியவுடன் கடவுச் சீட்டுகளைத் தம்மை வேலைக்கு அமர்த்துபவர் களிடம் கொடுத்துவிட்டு, கொத்தடிமைகளாக வேலைசெய்யும் இவர்களுக்கு, மேலைநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களுக்குக் கிட்டும் சலுகைகள் கிடையாது. வேலையில் பாதுகாப்பும் கிடையாது. மாதாமாதம் ஒப்பந்தம் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழுபவர்கள் பெருவாரியினர். இவர்களின் கடினஉழைப்பின் ஊதியம் இருவழிகளில் இக்கரையை அடைகின்றது. வங்கிகள் மூலம் வருவது ஒரு வழி; இரண்டாவது வழி வங்கியில் கிடைப்பதை விட சற்றே கூடுதலாக கொடுத்து அந்நியச் செலாவணியை இக்கரையில் வாங்கத் தயாராக உள்ளவர்கள் வழி வருவது. இந்தப் பேரத்தில், அக்கரைவாழ் இந்தியனின் வெள்ளைப்பணம் கறுப்பாக, இக்கரைவாழ் இந்தியனின் கறுப்புப் பணம் அந்நியச்செலாவணியாக அல்லது வெள்ளைப் பணமாக மாறுவதும், வருமானவரி ஏய்க்கப்படுவதும் நம் பொருளாதார அமைப்பைப் பிடித்துள்ள பிணிகளாகும்.

இங்கு அவர்கள் வேண்டுமளவு கிடைக்காத பணத்தைத் தேடி, குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட அரபு நாடுகள் செல்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தை வெள்ளையர்கள் ஆண்டபோது, சிந்து, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், கோவா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களிலிருந்து பெருவாரியாக மக்கள் மற்ற காலனிநாடுகளுக்கு உழைக்கச் சென்றனர். இவற்றில் பெரும்பாலோர் கரும்பு, பருத்தித் தோட்டங்களில் வேலை செய்யவும்; கட்டிடம், சாலை, இருப்புப்பாதை அமைக்கும் தொழிலாளர்களாகவும் சென்றனர். சிலர் ஆசிரியர், மருத்துவர், கணக்கர் என்பன போன்ற வேலைகளைச் செய்யவும், பலர் வாணிபம் செய்யவும் சென்றார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்றும் கிழக்கே கிரிஸ்மஸ் தீவுகள், ஃபிஜித் தீவுகள் வரையும், மடகாஸ்கர், சேசல்ஸ் மாரிஷியஸ், கிழக்கு மற்றும் மேற்கு, தெற்கு ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் என்றும், மேற்கே பிரிட்டிஷ் கயானா, (தென் அமெரிக்கா) வரையும் சென்றனர். மூன்று, நான்கு தலைமுறைகள் வாழ்ந்துவிட்ட பலர், அந்நாட்டுக் குடிமக்கள் ஆனார்கள். அவற்றில் சிலர் அன்று அந்த நாடுகளை ஆண்ட ஆதிக்கத்தின் (பிரிட்டிஷ், பிரெஞ்ச், டச்சு) குடியுரிமை பெற்றவர்கள். அந்த நாட்டுக் குடிமக்களை விடக் கடினமாக உழைத்த இந்தியர்களை வெள்ளையர்கள், அங்குள்ள நாட்டினரை விட சற்றே உயர்வாக சலுகைகள் கொடுத்து நடத்தினர். இது இந்தியர்கள்பால் உள்ள அன்பால் அல்ல, இனங்களைப் பிரித்தாளும் உத்தியால். மேலும் வெய்யில் சுட்டெரிக்கும் இந்த நாடுகளில், வெள்ளையன் ஒருவன் பருத்திக்காடுகளில் பருத்தி எடுப்பதையோ, கரும்பு தோட்டங்களில் கரும்பு வெட்டுவதையோ நினைத்துக்கூடப் பார்க்காத காலம், அந்தக் காலம். கிடைக்கவே கிடைத்தான் இந்தியன். இவர்களில் மலேரியா, காலரா, பாம்புக்கடி, வைசூரி என்று பல கேடுகளைச் சந்தித்து இறந்துபட்டவர் பலர். காலனியாதிக்கத்தின்போது கீன்யாவில் மொம்பாஸா கடற்கரைப் பட்டினத்திலிருந்து இருப்புப்பாதை போட இந்தியக் கொத்தடிமைகள் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்டோர் (ஜிsணீஸ்ஷீ) சாவோ என்னும் வனப்பகுதியில் வேலை செய்யும்போது சிங்கங்களுக்கு இரையாயினர் என்பது வரலாறு. கிழக்கு ஆப்பிரிக்காவில் காடுகளை அழித்து சாலைகள், இருப்புப் பாதைகள் போட்ட தொழிலாளர்கள், அடிப்படைவசதிகள் இல்லாத நிலையில் உழைத்து வேலைகளை முடித்தது ஒரு பிரமிக்கத்தக்க சாதனை.

வெள்ளைக்காரருக்கு கூழைக்கும்பிடு போட்ட ஆப்பிரிக்கா சென்ற இந்தியர்கள், ஆப்பிரிக்கரை தீண்டப்படாதவராகக் கருதினர். இதை இந்தியக் கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு ஒதுங்கி நின்றவர்கள், வெள்ளையர்களும் ஒருநாள் வெளியேறி, ஆப்பிரிக்கர்களின் கையில் ஆட்சிவரும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்காமல், மதில்மேல் பூனைகளாக வாழ்ந்தனர். இரண்டு தலைமுறைகளில் இவர்களுக்கு ஏற்பட்ட மாற்றம் சுவையானது. கிழக்கு ஆப்பிரிக்கா வந்த உழைப்பாளிகள், மக்கட்பெருக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத வளமான பகுதிகளில் தாங்கள் செய்யவந்த வேலை முடிந்த பின்னும், தாய்நாடு திரும்பாமல் தங்கிவிட்டனர். பின்னர் பெட்டிக்கடைகள், இதர சிறு தொழில்கள், கொள்முதல் முதலியனவற்றில் ஈடுபடவும் ஆரம்பித்தனர். அங்குப் போட்டிகள் அதிகம் இல்லாததாலும், அவர்கள் ரத்தத்தில் ஊறிய வியாபார திறமையாலும் தந்திரத்தாலும், அங்கிருந்தவர்களின் மெத்தனத்தாலும் வியாபாரம் செழித்தது. கடினமாக வேலைசெய்து வியாபாரத்தைப் பெருக்கியது மட்டுமின்றி, ஆப்பிரிக்க மக்களை உபயோகித்தும், ஏய்த்தும் பணத்தைப் பெருக்கியதும் மறுக்க முடியாத உண்மைகள். கல்வியறிவு இல்லாமை, செல்வச் சேர்க்கை, இவற்றால் உண்டான செருக்கு இவர்களிடம் உருவாக ‘இந்தியன்‘ என்றால் ஆணவம் கொண்டவன் என்று சாதாரண ஆப்பிரிக்கன் எண்ண ஆரம்பித்தான். விடுதலையும் வந்தது. ஆப்பிரிக்கர்களின் அடிமைத்தளை நீங்கி, அவர்கள் கொண்டாட, வெள்ளையர் ஏன் போனார்கள் என்று இந்திய வம்சாவழியினர் அங்கலாய்க்க ஆரம்பித்தனர். இதேநிலை இன்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ளது.

இன்றும் இந்தியர்களை இழிவாகக் குறிப்பிட ‘கூலி’ என்ற வார்த்தையை தென்னாப்பிரிக்காவில் ‘போயர்’ என்னும் வெள்ளைக் காரர் பயன்படுத்துவர். சில ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரத்தில் இந்திய வியாபாரிகளின் பாதிப்பு பலமானது. முதலில் உகாண் டாவை ஓபோட்டே ஆண்டபோது மேத்தா, மாத்வானி குடும்பங்கள் அந்நாட்டில் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தன. இதனால், ஏற்பட்ட வெறுப்பே இடிஅமீன் ஆட்சியில் இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து வெளியெற்றப்படுவதில் முடிந்தது. இன்றும் ஆப்பிரிக்கர்கள், கிழக்கு ஆப்பிரிக்க இந்தியர்களை, சுயநலமிகளாகப் பார்த்தாலும் அவர்களைத் தம் நாட்டின் தேவையான தீமைகளாக உணர்கின்றனர். பல ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை அடைய, இங்கு வாழ்ந்த இந்தியர்கள் மேலைநாடுகளில் குடியேற ஆரம்பித்தனர். இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதை நினைத்துக்கூடப் பார்க்காதது, மேலைநாடுகளில் வாழ்வதே நல்வாழ்வின் உச்சநிலை என்ற திடமான நம்பிக்கையினால்தான். இங்கிலாந்து சென்ற கிழக்கு ஆப்பிரிக்க இந்தியர்கள் ‘நீங்கள் அன்று அங்கு இருந்ததால், இன்று நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று உரிமை கொண்டாடி குடியுரிமைக்கு வாதிட்டனர். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றதால், இவர்களுக்குக் கௌரவ வெள்ளைக்காரர் அந்தஸ்து ஒன்றும் கிட்டுவதில்லை. இவர்கள் குடியேறியபோது எதிர்கொண்ட பிரச்சினைகள், மேலை நாடுகளில், குடியேறும் எந்த இந்தியருக்கும் ஏற்படும் பிரச்சினைகளே.

இந்தியாவில் இருந்து மேலைநாடுகள் செல்லும் இந்தியர்கள், வேறுவிதமான ரகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில், உயர்கல்விக் கென அயல்நாடு செல்லும் ஆர்வமிக்க இளைஞர்கள், ஒருவகை. நம்நாட்டுக் கல்லூரிகள் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது, ஆனாலும் அக்கரைக் கலாசாலைகள் தரும் உதவிச்சம்பளம் கணிசமானது என்பதாலும், இங்கில்லாத ஆராய்ச்சி உபகரணங்கள் அங்கிருப்பதா லும், அங்குச் செல்வோர் பலர். தேவைக்கு அதிகமான பட்டதாரி களை இங்குள்ள கலாசாலைகள் உருவாக்கி வேலையில்லாதத் திண்டாட்டத்தினைத் தோற்றுவிக்குங்கால், தம் எதிர்காலம் இருண்டு விடாமல் இருக்க அக்கரை செல்வது சிலருக்கு வாழ்வு என்பது மரணப்பிரச்சினை போல உள்ளது. மேலைநாடுகள் சென்று பயின்று சாதனைகள் படைத்த அறிவியலாளர்களின் பட்டியல் ஒன்று போடலாம். நோபல் பரிசு பெற்ற நார்லிகர், சந்திரசேகர், அமர்த்யா சென் முதலியோர் இந்தியர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள். நம் நாட்டில் ஏற்படும் அறிவுத்திறன் இழப்பு பற்றிப் பேசும் சிந்தனைக்குதிர்கள், இதுபற்றி உண்மையாகவே அக்கறை இருந்தால் அறிவுத்திறனை மக்கவைக்கும் வேலை நிலவரத்தை மாற்றவும், வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும் ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பிறப்பிக்க வேண்டும். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அக்கரைபோன 120 லட்சம் இந்தியர்களில் அநேகர், அந்நாடுகளில் குடியேறி குடியுரிமை பெற்றவர்கள். இந்தியாவின் அறிவுத்திறனிழப்பு மேலைநாடுகளின் ஆதாயம். ஒரு கணிப்பின்படி அமெரிக்காவில் மட்டும் கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் குடியேறி உள்ளனர். உயர் கல்வித்தகுதிகள் கொண்ட இவர்கள், தம் அறிவு கடின உழைப்பு இவற்றை மூலதனமாக வைத்துப் பணியாற்றி, வளமான வருமானம், வாகனம், வீடு என்று இந்தியாவில் வாழ்ந்ததைவிட வசதிகளுடன் வாழ்கின்றனர். இதே சமயத்தில், அந்நாடுகளில் குடியுரிமை பெற்ற இந்திய நிபுணர்கள் பெறும் வசதிகள், இதே தகுதிகள் கொண்ட வெள்ளைக்காரர் பெறும் வசதிகளைவிடக் குறைவானவையே. வேலைவாய்ப்புகள், இனவேறுபாடின்றி அளிக்கப்படும் என விளம்பரப்படுத்திக்கொள்ளும் நிறுவனங்களிலும், இந்தியர் ஒருவரும், வெள்ளையர் ஒருவரும் விண்ணப்பித்தால், இந்தியர் நாசூக்காக ஒதுக்கப்படுவதுண்டு. இதற்கு அந்நிறுவனங்கள் சொல்லாத காரணம், ‘வெள்ளைத் தோல்’ என்னும் முக்கியமான தகுதி இந்தியருக்கு இல்லாதது என்பது.

இனப்பிரச்சனை ஒருபுறமிருக்க அக்கரைவாழ் இந்தியர்கள் எதிர் நோக்கும் பெரும்பிரச்சினை கலாச்சார அதிர்ச்சி. இந்தியாவில் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்து, கிராமத்துப் பள்ளியில் ஆரம்பித்து, ஒரு நாட்டுப்புறக் கல்லூரியில் பயின்று, இங்கிலாந்தில் குடியேறி பூஜை, புனஸ்காரம் செய்து வாழும், தமிழர் ஒருவர் என்னதான் உபதேசித்தாலும், அவரை ஒரு தொல்லையாக, இங்கிலாந்தில் வாழும், வளரும் அவரது வாலிபப்பிள்ளைகள் நினைத்தால் அதற்கு வெள்ளைக் கலாச்சாரத்தின் பாதிப்பு, சகவாலிபர்களின் அபிப்பிராய அங்கீகாரம் முதலியன காரணங்கள் ஆகும். இவை வெளிநாட்டில், வாழும் குடும்பங்களில் சந்ததி இடைவெளியையும் சில சமயங்களில் பிளவையும் ஏற்படுத்துகின்றன.

இதுபோலவே அங்கு பணிபுரியச் செல்லும் இந்திய மனைவியும், பழைய பாரத நாரீமணியின் வார்ப்பிலிருந்து வெகுவாய் மாறுபட்ட வள். விவாகரத்து பற்றி இங்கு பேசக்கூடத் தயங்கிய அபிப்ராய பேதங்கள் கொண்ட தம்பதியினர், மேற்கூறிய சூழ்நிலையில் வாழும் போது, விவாகரத்து செய்தால் என்ன? எனச் சிந்திக்க ஆரம்பிப்பது, வெள்ளைக் கலாச்சாரத்தின் பாதிப்பாகும். இதனாலேயே அக்கரை யில் வாழ்ந்தாலும், இந்திய விவாகத்தின் உறுதியை நாடி இக்கரை வந்து துணைதேடும் பழக்கம் ஏற்பட்டது. இது இந்திய விவாகத்தின் உறுதியை நாடுபவர்களின் முயற்சி மட்டுமின்றி, அக்கரை பச்சையென நினைக்கும் இக்கரைவாழ் இந்தியர்களின் அயல்நாட்டு மோகத்தை கல்யாணச் சந்தையில் உபயோகிப்பவர்களின் முயற்சியும் ஆகும்.

மேலைநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் நிலையை விட முன்னேறும் நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் நிலை வெகுவாக மாறுபட்டது. வளரும் மூன்றாம் உலகநாடுகளான சூடான், சாம்பியா, தன்சனீயா, யுகாண்டா முதலிய நாடுகள் இந்திய அரசை வேண்ட, இங்கு அயல்நாட்டு வேலைவாய்ப்புகளைக் கவனிக்கும் இலாகா (எப்.ஏ.எஸ்) தங்கள் பட்டியலிலுள்ள நிபுணர்களின் பெயர்களைத் தந்துவிட, இந்திய அரசின் ஆசீர்வாதத்துடன், மருத்துவர்கள், பொறியிய லாளர்கள், கணக்கர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்நாடுகளுக்குச் செல்கின்றனர். இந்த வகையில்தான் அடியேனும் உலகத்திலே ஏழ்மைமிகு நாடுகளில் ஒன்றான தன்சீனியாவிற்கு சென்று அந் நாட்டின் அரசுக்காகப் பணியாற்ற ஆரம்பித்தேன். சிலர், இங்குள்ள நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்தும் வேலை பெறுகின்றனர், பொதுவாகப் பலர் அந்தந்த அரசு அமைப்புகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் ஊதியம், இந்தியாவில் கிடைத்ததைவிடச் சற்றே கூடுதல் ஆனாலும் முன்பு வெள்ளைக்காரர் இதே நாட்டில் பெற்ற ஊதியம் அல்லது இதே தகுதியுள்ள இந்திய நிபுணர் ஒருவர் சர்வதேச நிறுவனம் ஒன்றில் இதே நாட்டில் பணிசெய்து பெறும் ஊதியம் இவற்றுடன் ஒப்பிட்டால், ஏணி வைத்தாலும் எட்டாது. அந்நாட்டு அரசுகள், இந்தியத் தொழில்நுட்பம், (இது மேலைநாட்டுத் தொழில் நுட்பத்திற்கு எள்ளளவும் குறைந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவும்) மலிவான விலையில் கிடைக்கும் என்பதை அறிந்ததும், நம்மவர்கள் அக்கரை செல்லும் வேகத்தில், அல்லது மோகத்தில், ஒப்பந்தங்களை ஓரக்கண்ணால் படித்துவிட்டு அயல்நாடு சென்ற பின்னரே அந்த ஒப்பந்தத்தின் நிர்பந்தங்களை சந்திப்பதும் காரணங்கள் ஆகும்.

இந்தியா மற்றும் இதர நாடுகளில் படித்துவிட்டு, முதுகலைப் பட்டங்கள் பெற்று பத்து, இருபது ஆண்டுகள் வேலைசெய்துவிட்டு, திறமையுள்ள இந்தியர்கள், முன்னேறும் நாடுகளில் சர்வதேச நிறுவனங் களுக்காகப் பணிபுரிய வருகையில், அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளில் இருந்துவரும் இளம் பட்டதாரிகள், இதே மட்டத்தில் பணிபுரிய வருவதுண்டு. இதற்கு இந்திய நிபுணர்களின் திறமைக்குறைவு காரணமல்ல. மேலைநாடுகள் சர்வதேச நிறுவனங்களுக்குத் தரும் பணம் அதிகம் என்பதால் வெள்ளையர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்பது முதல் காரணம். இரண்டாவது இந்த சந்நிதானங்களில், நுழைய என்ன தெரியும் என்பதைவிட, எவரைத்தெரியும் என்பதும் முக்கியம்.

பல முன்னேறும் நாடுகளில், அன்றாட வாழ்க்கை, பிரச்சினைகள் நிறைந்தது. தலையாய பிரச்சினை, சேமிக்கும் சிறிதளவு பணத்தையும் அந்தந்த நாடுகளில் உள்ள அந்நியச்செலாவணி நெருக்கடியால், இந்தியாவுக்கு அனுப்புவது கடினமானதாகவோ, சில சமயங்களில் இயலாததாகவும் ஆகிவிடுவது. அத்யாவசியப் பொருட்களின் கட்டுப் பாடு, மருத்துவ வசதிகள் இல்லாமை, அவ்வப்போது நடக்கும் உள்நாட்டுக் கலவரம், வழிப்பறி, கற்பழிப்பு, கொள்ளை, களவு, ஆயுதப்புரட்சி போர், இவற்றில் வம்பாக மாட்டிக்கொள்வது அக்கரை வாழ் இந்தியர்களின் விதி. இவர்களில் பல்லைக் கடித்துக்கொண்டு ஆண்டுகளைக் கழித்துவிட்டு ஒப்பந்த இறுதியில் இந்தியா திரும்பி பெருமூச்சு விடுபவர் சிலர். ஒப்பந்தங்களை முறித்துவிட்டு தாய்நாடு அல்லது வேறொரு நாடு செல்பவர் சிலர்.

இந்தியாவில் வேலை, சேவை செய்ய வாய்ப்பு இருந்தும், தேவையான வசதிகள் இருந்தும், வெளிநாடு செல்வோரின் துடிப்பு விரும்பத் தக்கதல்ல. இந்த வகையில், அரபுநாடு செல்லும் இந்திய மருத்துவர் களை நம் நாட்டில் பட்டிதொட்டிகளில் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறும் வறியவர்கள்தான் மன்னிக்க வேண்டும். மருத்துவர்கள் என்றால் விதிவிலக்குகள் உண்டு. சியராலியோனில், (மேற்கு ஆப்பிரிக்கா) லாக்கா என்னும் குக்கிராமத்தில், சவக்கிடங்கு ஒன்றை மருத்துவமனையாக்கி தொழுநோயாளிகளைப் பேணிக்கொண்டிருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ரங்கராஜ் என்பவரைச் சந்தித்திருக்கிறேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று கரிகிரியில் தொழுநோய் மருத்துவமனையில் பயிற்சி பெற்று, ஆப்பிரிக்கா சென்று சாலைகள் இல்லாத பகுதிகளிலும், காடுகளில் உள்ள குக்கிராமங்களிலும் சென்று தொழுநோயாளிகளைக் கண்டு மருத்துவம் செய்யும் இவர் பணிக்குத் தேசம், இனம் என்ற எல்லைகள் கிடையாது. இவ்வாறு பல ஆண்டுகள் பணிசெய்யும் ஆங்கிலேயர் களுக்கு பிரிட்டிஷ் அரசு ஓ.பி.இ. (ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்) விருது கொடுக்கும், ஆனால் இந்தியாவுக்கு அக்கரைவாழ் இந்தியர்களின் பணிபற்றி ஒன்றும் தெரியாது. ஒருவேளை ரங்கராஜ னுக்கு ‘டோமியன் டட்டன்’ விருது கிட்டினால், அப்போது அவரை நம் நாடு சொந்தம் கொண்டாடும். சாம்பியாவுக்கு எழுபதுகளில் வந்து இன்றுவரை, முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட, ஹெச்.ஐ.வி யால் பீடிக்கப்பட்ட சிறுவர்களைப் பேணி, அவர்கள் வாழும் எஞ்சிய காலத்தையும் இயன்ற அளவு ஆரோக்கியமாகக் கழிக்க பணியாற்றும், சிறுவர்நல மருத்துவர் கணபதிபட், மற்றொரு எடுத்துக்காட்டு. சாம்பியாவில் சிங்கங்கள் திரியும் சிச்சிலி என்னும் வனப்பகுதியில் மிக எளிமையான வசதிகளுடன் வாழ்ந்து அங்குள்ள மருத்துவமனையிலும், பள்ளியிலும் பணிபுரியும் கோவை பிரசென் டேஷன் கான்வென்ட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கன்யாஸ்திரிகள் பொதுநலச் சேவையின் மொத்த உருவங்கள். இவர்களைப் போல் சேவை உணர்வுடன் செல்வோரை விரல்விட்டு எண்ணலாம். இங்குதான் அயல்நாடு செல்பவர்களை அவர்களுடைய நோக்கத்தின் அடிப்படையில் பிரிப்பது அவசியம் ஆகிறது. சேவை உணர்வு உள்ளவர், கூலிக்கு மாரடிப்பவர், இந்தியச் சூழ்நிலைக்கு அஞ்சியவர், அக்கரை மோகம் கொண்டவர், பொற்களஞ்சியம் தேடும் பேராசைக் காரர், வறுமைக்கோடு தாண்ட நினைப்பவர் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

முன்னேறும் நாடுகளில் பணியாற்ற அலங்காநல்லூர், விளாத்திக் குளம், குடியாத்தம் என்று பல சிற்றூர்களிருந்து இங்குவாழ வருபவர் களில் சிலர் வரும்போது சிற்றூர் சில்லறைத்தனத்தையும் பத்திரமாக மூட்டை கட்டிக்கொண்டு வந்து, இங்கும் ஒரு சிற்றூர் சூழலை உருவாக்குவர். இந்தக்கூட்டம் அந்தஸ்து, அதாவது எந்த நிறுவனத்தில் வேலை செய்பவர், எந்த வகை வாகனம் ஓட்டுபவர் என்பதைப் பொறுத்து கலந்துறவாடும். இவர்கள் பொதுவாக தாம் வாழவந்த நாட்டின் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகள் ஆகியனவற்றை பற்றி யோசித்துக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். பொதுவாக நம்மவர் அயல்நாடு செல்கையில் அங்கு வாழும் இந்தியர், வெளிநாட்டவர் பற்றி நல்லதையும், பெரும்பாலும் கெட்டதையும் இலவச உபதேசமாக அளிப்பது வழக்கம். நான் கேட்டவைகளில் சில: “சீனாக்காரனை நம்பாதே, சிரித்துப் பேசி கழுத்தை அறுத்துவிடுவான்.” “அரேபியர்கள் ஈவு இரக்கமின்றி இருப்பவர்கள், சோம்பேறிகள் . . .” “பர்மியர்கள் கெடுபுத்திக்காரர்கள் . . .” “இங்கிலீஷ்காரர்கள் தங்கள் முட்டாள்தனத்தில் பெருமை அடைபவர் கள் . . .” “ஆஸ்திரேலியா வெள்ளையர் நாடு, நீ எவ்வளவு பெரியவன் ஆனாலும் உன்னைக் கருப்பு . . . என்று அழைத்தால் திகைத்து விடாதே . . .” “ஆப்பிரிக்கர்கள் மறுநாள் பற்றி நினைப்பதில்லை, குடித்துக் கும்மாளம் போடுவது இவர்கள் வழக்கம் . . .”

நான் நானாக இருப்பதில், இந்தியனாக தமிழனாக இருப்பதில் பெருமை கொண்டவன். ஆனாலும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியநேர்ந்தபோது சில சமயங் களில் தலைகுனிய நேர்ந்தது. ஆப்பிரிக்காவில் கடவுள் மனிதனைப் படைத்தது பற்றிய கதை ஒன்று உண்டு. ஆப்பிரிக்கர், இந்தியர், வெள்ளைக்காரர் என்னும் மூன்று இனங்களைப் படைத்தவுடன் மூளை, காசு, கொட்டு ஆகிய மூன்றையும் முன்வைத்து, ஒவ்வொரு வரையும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்ளச் சொல்ல, இந்தியர் முதலில் காசையும், வெள்ளைக்காரர் மூளையையும், ஆப்பிரிக்கர் கொட்டையும் எடுத்துக்கொண்டார். இந்தக் கதையை என்னிடம் சிரித்தவாறே சொன்ன என் ஆப்பிரிக்க நண்பர், “அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் கொட்டடித்துக்கொண்டே இருக்கிறோம் . . .” என்று கூறி, தாம் இந்த மூன்று இனங்கள் பற்றி என்ன நினைக்கிறார் கள் என்பதைச் சுருக்கமாகக் சொன்னார். இந்தியர் என்றால் ‘பணப் பேய்கள்’ என்ற அபிப்ராயம் உருவானதற்குப் புண்ணியம் கட்டிக் கொண்டவர்கள் இந்திய வணிகர்கள். ஒருமுறை ஸ்கிபோல் (ஆம்ஸ் டர்டாம்) விமான நிலையத்தில், கூட்டத்திலிருந்து என்னைத் தனித்து வரச்சொல்ல, பெட்டியைச் சோதனையிட்டவரிடம் எரிச்சலுடன், இத்தனை பேர் செல்ல என்னை மட்டும் ஏன் பிரித்து எடுத்தீர்? என வினவ, ‘நீர் சூரினாம்’ (டச்சு கயானா) நாட்டில் இருந்து வந்த இந்தியர் போலத் தோன்றினீர். எனவே போதைப்பொருட்கள் உங்கள் பெட்டியில் இருக்கின்றனவா எனத் தேடினேன்; தேடுவது என் கடமை, என முகம் மாறாமல் பதில் அளித்தார். சிங்கப்பூரில் ஒருமுறை தமிழர் கடை ஒன்றில், நூறு டாலர் நோட்டைக் கொடுக்க, அவர் அதைத் திருப்பி திருப்பிப் பார்த்தார். நான் பொறுமையிழந்து, “என்ன நீர் நம்மவர் ஆனாலும், நம்மையே சந்தேகிக்கிறீர்களே” என்று சொல்ல “ஐயா கோபித்துக்கொள்ளதீர்கள், நம்மவர்கள்தான் அதிகமாக ஏமாற்றுகிறார்கள்” என்று அவர் பதில் அளித்தபோது கடாரம் வென்ற, சாவகம் வென்ற தமிழ்ச்சாதியை நினைத்துக் கொண்டேன். இந்தியர்களை புத்திசாலிகள், கடின உழைப்பை மேற்கொள்ளுவார்கள், எந்தவிதச் சூழ்நிலையையும் பொறுத்துக் கொள்ளுவார்கள் என்பது போன்ற அபிப்ராயங்களை உருவாக்கியவர் களுக்கு, சிலவற்றில் கெட்ட பெயரும் உண்டு.

இந்தியாவிற்கு அத்தியாவசியமான அந்நியச்செலவாணியை தம் உழைப்பின் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரும் அக்கரைவாழ் இந்தியர்கள், இக்கரை வருகையில், ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு கடத்தல்காரனுக்குள்ள குணாம்சங்கள் தன்னையும் அறியாமல் ஏற்பட்டு இருக்குமோ என்ற ஐயம் உருவானால் அதற்குச் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘ஓகோ’ இவர்கள் வெளிநாட்டில் சுகபோகத்தில் திளைத்தவர்களாக்கும், என்பது போன்ற காழ்ப்புணர்வு இவர்களிடம் இருப்பதை சில சமயங்களில் காணலாம். சில இந்தியத் தூதரகங்களிலும் இந்தப் போக்கை காணலாம். எண்ணிக்கையில் அதிகமான இந்தியர்கள், அக்கரையில் வாழும்போது பாரதத் தாயின் அநாதைக் குழந்தைகள் ஆகவும் நடத்தப்படுவதுண்டு. மக்கள் பெருக்கத்திலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், உழன்று அக்கரை செல்லும் இந்தியர்கள், போட வேண்டிய எதிர்நீச்சல், கடைசியில் எல்லாம் சுபமாக முடிந்தது எனக்கூறக் கூடிய கதையல்ல. வெளிநாடு சென்றவரெல்லாம் சுகபோகத்தில் திளைப்பதாக எண்ணுவோருக்கு அது மலர்ப்படுக்கை அல்ல என்பதை எடுத்துக்கூற வேண்டிய அவசியம் உள்ளது. இந் நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் வெளிநாடு சென்ற பலர் அவர்கள் உழைப்பின் பலனாகப் பெற்ற செல்வத்தையும், இதர வசதிகளையும், பற்றி மட்டும் பேசிவிட்டு அதற்காக அவர்கள் எவ்வாறு, எப்படியெல்லாம் பாடுபட்டவர்கள் என்பதைக் கூறாமல் விடுவதாகும். வசதி என்னும் புணுகை தடவுவதால், இன்னல் என்ற புண்ணே இல்லை என்ற நிலைவந்துவிட்டது.

பல ஆண்டுகள் அக்கரையில் வாழ்ந்துவிட்டு மறுபடியும் இந்தியா வந்து வாழ ஆரம்பிக்கையில், அக்கரைவாழ் இந்தியர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அக்கரையில், வேறுவிதமான வேலைநிலை, வாழ்க்கைமுறை, மனப்பான்மை, ஆகியவற்றிற்குப் பழக்கப்பட்டவர்கள், அதன்பின் மறுபடியும் இந்தியச் சூழ்நிலையில் புகுவது, நிலைகொள்வது தட்டுத்தடங்கலின்றி நடக்கும் காரியமல்ல. பல ஆண்டுகள் அக்கரை வாழ்ந்தது மட்டுமல்ல காரணம். கடந்த ஆண்டுகளில், இந்தியாவும் வெகுவான மாற்றங்களுக்கு உட்பட்டதும் காரணமாகும். எடுத்துக்காட்டாக அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் காணப்படும் அடுத்தவரைப் பற்றிய அக்கறையற்ற அசுரகதியில் இயங்கும் போக்கு இங்கும் வந்துவிட்டது.

சேமிப்பு அதிகம் இல்லாத சில அக்கரைவாழ் இந்தியர்களுக்கு தாய்நாடு வந்து வாழ்க்கையை ஆரம்பிப்பது புனர்வாழ்வுத் திட்ட மாகிவிடுகிறது. அக்கரையில் உள்ள போதைப்பொருட்களின் பயன்பாடு, ஆண்பெண் உறவு இவை பற்றி இக்கரை வாழ்வோர் கொண்டுள்ள ஒருதலைப்பட்சமான அபிப்ராயங்களும் கலந்துற வாடலுக்குப் பங்கம் விளைவிப்பன. அயல்நாடுகளில் வளர்ந்த இந்திய வாலிபர்கள், இங்கு வருகையில் அவர்கள் நம்மவர் சிலரால் தீண்டப்படாதவர்கள் போல நடத்தப்படுவதற்குக் காரணம், நாங்கள் உங்களைவிடப் பரிசுத்தமானவர்கள் என்னும் மனப்பான்மையே! இங்குள்ளவர்களிடம் மேற்கூறிய தீய பழக்கங்கள் எக்கரையிலும் காணப்படும் சமூகப்பிணி. அது வெகுசிலரையே பீடிக்கும் என்பதைச் சொல்லி ஓயவில்லை. அக்கரை சென்றவர்கள், இக்கரையில் இருந்து சென்றவர்கள்தான். அவர்களுக்கு அக்கரையின் பாதிப்புகள் இருந்தாலும் அடிப்படை சமூக நோக்குகள், மனப்பான்மை, சம்பிரதாயங்கள் (நல்லவையும், கெட்டவையும்) அதிகமாக மாறுவதில்லை. அக்கரைவாழ் இந்தியர்கள் எக்கரையில் வாழ்ந்தாலும் மனத்தளவில், உந்திக்கொடி அறுபடாத அன்னை பாரதத்தின் அருந்தவப்புதல்வர்களே.


Friday, April 08, 2005

பேசும் பொம்மைகள்

Image hosted by Photobucket.com

பேசும் பொம்மைகள்
நாவல்
ஆசிரியர் : சுஜாதா
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

முன்னுரை

குங்குமம் வார இதழில் தொடர்ந்து வந்தபோது இந்தக்
கதையின் ஆதாரக்கருத்தான “டவுன் லோடிங்”
(downloading) என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர்
என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின்
அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு
மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து
இது சாத்தியமே இல்லை என்றார்கள்.

இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது
சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற
முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில்
’செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய
மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு
வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின்
ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்.’

1991க்குப் பிறகு நீண்ட காலம் மறுபதிப்புக்காகக்
காத்திருந்த இந்த நாவலை ஏழிரண்டாண்டுக்காலம்
கழித்துப் படித்தாலும் இதன் சுவாரஸ்யம் குறையாமல்
இருப்பதன் காரணம் இதில் கூறப்பட்டுள்ள மருத்துவ
அறிவியல் சாத்தியங்கள் இன்னும் நடைமுறைக்கு வராததே. சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதை
எழுதும்போது இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி
எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரேயரு தேவை
அதன் ஆரம்பங்கள் நிகழ் காலத்தில் இருந்தாக வேண்டும்.

இப்புத்தகத்தை சிறப்பாக வெளியிடும்
உயிர்மை பதிப்பகத்தாருக்கு நன்றி.

சுஜாதா
சென்னை
டிசம்பர் 2004

புத்தகத்திலிருந்து . . .

அத்தியாயம் 18

மாயா விளிம்பில் இருந்தாள். அந்த விளிம்பில்
அவளுக்குக் குரல்கள் கேட்டன. கைகால்களை அசைக்க
விருப்பம் இருந்தது. விருப்பம் மட்டும். ஆனால்,
செயல்படுத்த முடியவில்லை, கண் இரப்பைகளும்
ஒத்துழைக்க மறுத்தன. பேச்சுக்குரல் தெளிவாகக்
கேட்க, யாரோ அவளைத் தொட்டதும்தான் கண் திறக்க
முடிந்தது. திறந்ததும் அந்த முகம் தெரிந்தது. ‘மாயா!’ என்று
முகம் அவளைக் கூப்பிட்டுப் புன்னகைத்தது. மேலே
விட்டத்தில் வெளிச்சப் பிரகாசம் கண் கூசியது. தான்
எங்கே, தனக்கு நிகழ்வது என்ன என்பதெல்லாம்
முக்கியமாகப் படவில்லை. படுத்துக்கொண்டு, நிகழ்வதை
எல்லாம் வேறு யாருக்கோ போல வேடிக்கை பார்த்தாள்.
சிரிப்புக்கூட வந்தது. இப்போது அவள் பயம் முழுவதும்
விலகிப்போயிருந்தது. தலைமேல் ஏதோ லேசாகக் கனத்தது.
அதைத் தொட்டுப் பார்க்கலாம் என்றால் கைகள்
படுக்கையுடன் கட்டியிருந்தன. எதிரே ஒரு பச்சைத்
திரையில் அவள் இதயத் துடிப்பின் கீற்றல்கள் எழுதின.
ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு கீய்க் கேட்டது.

‘கீய்க் . . . கீய்க் . . . கீய்க்.’

“பல்ஸ் நார்மல். பி.பி. நார்மல் டாக்டர்.”

“ரெடி ஃபர்தி டவுன் லோடு.”

“ரெடி!”

மாயா அப்போதுதான் தன் தலை மேலிருந்து
பற்பல பற்பல இணைப்புகள் அந்த வெளியுலக
மிஷினுக்குச் செல்வதைப் பார்த்தாள். அவள் எண்ணங்களில்
ஓர் இரட்டைத் தனத்தை உணர்ந்தாள். ஒன்று
இதையெல்லாம் பார்த்து அலசும் எண்ணம். மற்றொன்று
அடித்தள எண்ணம். அதில் சம்பந்தா சம்பந்தமில்லாத
விஷயங்கள் தென்பட்டன. மாம்பழ வாசனை,
பள்ளிக்கூடத்தில் நனைத்துக் கொண்டது, ஊதுவத்தி
சுட்டது, பாரதிதாசன் வரிகள், சுனில் தந்த முத்தம்
என்று தொடர்பில்லாமல், ஆனால் ஏதும்
உறுத்தவில்லை. இன்பமாக இருந்தது. தொடையை
யாரோ தடவிவிடுவதுபோல.

“மாயா எப்படி இருக்கே?” பச்சை முகமூடிக்குப்பின்
அந்த முகத்தை அடையாளம் கண்டுகொள்ள
முடிந்தது. சாரங்கபாணி.

“வலிக்குதா?”

“இந்தப் பரிசோதனை இன்னும் ஓர் அஞ்சு
நிமிஷம், அதுக்கப்புறம் சில கேள்விகள்.
அதுக்கப்புறம் ரெஸ்ட். தூக்கம். அத்தனை பயந்தியே,
ஏதாவது ஆச்சா? ஏதாவது வலித்ததா?
ஏதாவது தொந்தரவா?”

“டாக்டர்! ப்ராஸஸ் இனிஷியேட்டட்!”

சாரங்கபாணி, “லெட் மி ஸி லெட் மி ஸி”
என்று திரையைப் பார்த்தார்.

அதில் எழுத்துகளுக்கு அருகில் இரு பிம்பங்கள்
தெரிந்தன. அவை பாதிபாதியாக, கலர் கலராக
இருந்தன. பிம்பத்துக்கு உயிர் இருப்பதுபோல்
சலனம் ஏற்பட்டது.

“டெக்ஸா மெத்தஸோன் கொடுத்தீங்களா
விஜி?”

“காலைல கொடுத்தோம் டாக்டர். ப்ளாஸ்மா
கார்ட்டிஸால் அளவு நாலு மைக்ரோ கிராம்.”

“நார்மல்தானே!”

“ஆமாம்.”

“எம்.ஆர்.ஐ.”

“நார்மல் லீஷன் எதும் இல்லை.”

“அப்ப ஆரம்பிக்கலாம்.”

“தாராளமா!”

மாயா தன் மனசில் மண்டையில் எங்கோ வண்ணப்
பொறித் தீற்றல்களை உணர்ந்தாள். ‘விர்ர்ர்’ என்று
தேனீபோல் மெஷின் சப்தம் உள்ளுக்குள் கேட்டது.

“சுனில், சுனில், இன்னும் கிட்ட வா சுனில்.”

“இதுக்கு மேல வர முடியாது, மாயா!”

“இன்னும் கிட்ட, இன்னும் கிட்ட.”

வெல்வெட் இருட்டில் ஜெல்லி தடவி அதில்
வழுக்கினாள். இடுப்பில் வலித்தது. மார்பின்
நுனிகளில் ஐஸ் தொட்டாற்போல உடல்
முழுவதும் வெவ்வேறு உஷ்ணப் பிரதேசங்களாக. . .
யாரும் இல்லை. யார் என்னைத் தொடுகிறார்கள்
என்பதுடன் ரயில் பாலத்தில் கடக்கும் சப்தம்
கேட்டது. மலைப்பாதையில் பூச்சிகளின் தொடர்ந்த
சப்தமும், மருந்து வாசனையும் கேட்டது.
முழுங்கு, முழுங்கு என்று அம்மா தலையில்
தட்டினாள். அப்பா அவள் கையைப் பிடித்து
சிலேட்டில் எழுத, மேனகாவுடன் நாடாக்கட்டிலை
நிற்க வைத்து இடைவெளியில் ஒளிந்துகொண்டு
ஒருவரையருவர் தொட்டுக்கொண்டு ரகசியம்
பேசினார்கள்.

“ப்யூட்டிஃபுல், ப்யூட்டிஃபுல்” என்றார்
சாரங்கபாணி திரையைப் பார்த்து.

“மாயா! பேர் சொல்லு.”

“நர்மதா.”

சாரங்கபாணி விஜியைப் பெருமையுடன்
பார்த்து, “கவனிச்சியா”

“நர்மதா, உன் வயசென்ன?”

“முப்பது.”

“எந்த ஊர்?”

மாயா தன் நினைவுகளில் தேடித்தேடி,
‘விஜயவாடா’ என்றாள்.“இட் ஒர்க்ஸ்” என்றான்
விஜி, ஆச்சரியத்துடன்.“இரு இரு, இப்பத்தானே
ஆரம்பம். ஸிக்ஸ்டி ஃபோர் கே தானே
ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கு. லிமாயி, இஸ்
ஷி ஓகே ஃபர் அனதர் ஸெஷன்?”

“நாட் நௌ சாரு! லெட்ஸ் டூ இட் டுமாரோ!”

“டூ இட் நௌ!”

லிமாயி பிடிவாதமாக, “சாரு, இப்போது வேண்டாம்.
பல்ஸ் விழுகிறது. கொஞ்சம் ரியாக்ஷன் தெரிகிறது
உடம்பில்.”

“கமான் லிமாயி. இது சாதாரணமான ரியாக்ஷன்!”

“சாரு, இவள் அக்காவுக்கு நிகழ்ந்தது இவளுக்கும்
நிகழ வேண்டுமா!”

சாரங்கபாணி உடனே மௌனமாகி, “ஆல்ரைட்,
நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்!” என்றார்.

விஜி ஏமாற்றத்துடன் “இன்றைக்கு இவ்வளவுதானா!”

“ஆம். இந்த இடத்தில் எச்சரிக்கை ஆசாமிகள், லிமாயி
போன்ற ஆசாமிகளின் கொட்டம் அதிகமாகிவிட்டது.”

“சாரு பேஷன்ஸ் சாரு, அவசரப்படாதே!”

“நான் முடிப்பதற்குள் ஆஸ்திரேலியன் நோபல் பரிசு
வாங்கி விடுவான்.”

மாயா இதையெல்லாம் அசுவாரஸ்யமாகத்தான்
கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் மனத்துக்குள் அந்த
வேளையில் பலவிதக் குழப்ப எண்ணங்கள் உலவின.
ஒரு மூலை என் பெயர் நர்மதா என்றது. மற்றொரு
மூலை நான் மாயா என்றது. ஒரு மூலையில்
தெலுங்கு வாக்கியங்கள் ஒலித்தன. மெல்ல மெல்ல
கற்பூரம்போல அந்த எண்ணங்கள் கரைந்து
சமநிலை ஏற்பட . . .

“நர்மதா?”

மௌனம்!

“நர்மதா!”

ம்ஹ¨ம்.

“மாயா?”

“ம்!”

“வாலட்டைல் தற்காலிக ஞாபகத்தைத்தான்
அடைய முடிகிறது” என்றார் சாரங்கபாணி.





மாயா வீட்டுக்கு வரவில்லை. அம்மாவும் அப்பாவும்
எட்டரை மணிக்கப்புறம் கவலைப்பட ஆரம்பித்தார்கள்.

“ஏன் வரலை இன்னும்?”

“அதான் தெரியலையே. இன்னிக்குத்தானே
ஆபீஸ்ல கடைசி நாள். அதனால எல்லா சம்பள
பாக்கியும் வாங்கிண்டு வர நாழியாறதோ என்னவோ?”

“எட்டரை மணிவரையா?”

“இரு இரு. ஏதாவது போன் பண்ணுவா.
சினேகிதிகளோட சினிமா கினிமா பார்க்கப்
போயிருக்கலாம்.”

“நீங்க வேணா போய் விசாரிச்சுட்டு . . .”

“ஒம்பது வரைக்கும் பார்க்கலாம். அதுக்கப்புறம்
கிளம்பறேன். எப்பப் பார்த்தாலும் உன் பெண்களால
கவலை, கவலை, கவலை.”

ஒன்பது மணிக்கு மாடி வீட்டில் அப்பாவுக்கு
போன் வந்திருப்பதாகத் தகவல் வந்து சொல்ல
அப்பா அங்கே சென்றார்.

“அப்பா, நான்தான் மாயா பேசறேன்.”

“மாயா எங்க இருக்கே? என்ன ஆச்சு?”

“ஆபீஸ்ல கொஞ்சம் லேட் ஆய்டுத்துப்பா.”

“ஏன் உன் குரல் என்னவோ மாதிரி இருக்கு?”

“அது வந்து தொண்டை கொஞ்சம் கம்மிருக்கு. . .
அப்பா! நான் எதுக்கு போன் பண்ணேன்னா, எனக்கு
ராத்திரி வீட்டுக்கு வர முடியாது. இங்கேயே நைட்
ட்யூட்டி போட்டிருக்கா. ஒரு முக்கியமான
ரிப்போர்ட்டை முடிக்கும்படியா டாக்டர் நரேந்திரநாத்
சொல்லியிருக்கார். அதனால இங்கேயே
டார்மிட்டரியில படுத்திருந்துட்டு
நாளைக்குக் காலைல, அல்லது சாயங்காலம்
வந்துருவேன். அம்மாகிட்ட சொல்லிடறியா?”

“மாயா! ஆர்யு ஆல்ரைட்?”

“ஐ’ம் ஆல்ரைட். கவலைப்படப் போறீங்களேன்னு
தான போன் செய்தேன். வெச்சுரவா?”

“சரி” என்றார் தயக்கத்துடன்.

போன் விடுபட்டதும், சாரங்கபாணி அந்தப் பெண்ணைப்
பார்த்து, “இன்னும் கொஞ்சம் ஃபீலிங்கோட
பேசணும் பெண்ணே” என்றார்.

“அந்தப் பெண் குரல் இன்னும் அட்ஜஸ்ட்
பண்ணணும்போல இருக்கு ஸார். சந்தேகப்படறார்.”

“கொஞ்சம் அக்காரிதம் மாத்திடறேன். அதைப்
பத்திக் கவலைப்படாதே. இப்ப என்ன, இனி
ராத்திரிக்குக் கவலைப்பட மாட்டாங்களே!”

“மாட்டாங்க ஸார்.”“சபாஷ்” என்று
தன் பையிலிருந்து சாரங்கபாணி ஒரு சாக்லேட்
எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். மாயா,
மேனகா . . . எத்தனைப் பேச்சுப் பேசுவே நீ!”

“எல்லாம் சாக்லேட் கொடுத்தா சரி” என்று
அவள் அந்தச் சாக்லேட்டைத் தன் உதடுகளில்
செருகிக் கன்னத்தை சூப்பிக்கொண்டு ஆர்வத்துடன்
இழுத்தாள். “இதுபோல உண்டா!” என்றாள்.

“எப்பவாவது உன் மார்ல இருக்கற மச்சத்தைக்
காட்டணும் மோகி நீ.”

“இப்பவே டாக்டர்.”

“வேண்டாம். எனக்கு வேற வேலை இருக்கு.”

“இதைவிட முக்கிய வேலையா?”

“ஆமா. நோபல் பரிசு!”சாரங்கபாணி, அந்த இடத்தை
விட்டு விலக அந்தப் பெண் மோகினி, ஸ்விட்ச்
போர்டில் தெரிந்த விளக்குகளை ஆராய்ந்து மெலிய
நளின விரல்களில் பட்டனைத் தட்டி, “டாக்டர் சாரங்க
பாணிஸ் ஆஃபீஸ்!” என்றாள்.



மாயாவின் அப்பா மனைவியைப் பார்த்து,
“அவகூட முதல்லே இப்படித்தான் ஆரம்பிச்சா.”

“எவ?”

“அக்கா மேனகா. முதல்ல வேலைப்பளு தலைக்கு
மேல இருக்கு. வீட்டுக்கு வரமாட்டேன்னுதான்
ஆரம்பிச்சா, எனக்கு என்னவோ கவலையா
இருக்கு.”

“கார்த்தாலபோய் அவ நிஜமாவே
வேலைதானான்னு பார்த்துட்டு வந்துருங்கோ.”

“அதான் சரி. ஆனா டாக்டர் நரேந்திரநாத்
கொடுத்த வேலைன்னா . . . அவர் நல்லவர்.
எசகு பிசகா எதும் நடக்காதுதானே?”


சுனில் பிட்ஸ்பர்க்கிலிருந்து விலகிச் சென்று
கொண்டிருந்தான். வலப் பக்க ஓட்டலும், நெடுஞ்சாலை
அடையாளங்களும் அவனுக்குப் பழகிவிட்டன.
அமெரிக்காவில் அவனுக்கு கார் தேவையாகத்தான்
இருந்தது. நானூறு டாலரிலிருந்து,
நாற்பதாயிரம் டாலர் வரை கார் கிடைக்கிறது.
சம்மதம் என்று சொல்லிவிட்டால் போதும்,
சாஸ்திரத்துக்கு ஒரு அட்வான்ஸ் கொடுத்து
விட்டு, மற்றதைத் தவணையாகக் கட்டிக்கொள்ளலாம்.
தேசமே தவணைமுறையில் இயங்குகிறது. தன்
நண்பனின் காரில் ப்ரொபஸர் பெர்னார்டு
என்பவரைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்தான்.
சாலையோரத்து மரங்கள், இலைகளின் நிறம்
பச்சையிலிருந்து துரு நிறத்துக்கு, மாறத்
தொடங்கியிருந்தன. இன்னும் சில தினங்களில்
எல்லாம் கொட்டிவிடும் என்று சொல்கிறார்கள்.

சுனிலுக்கு அமெரிக்கா வெறுமையாக இருந்தது.
மாயாவின் நினைவுகள் அவன் மனமெங்கும்
பரவியிருக்க, தினம் தினம் அவளை நினைத்தான்.
எத்தனையோ முறை போன் பண்ண முயற்சி செய்தும்
ஆஸ்பத்திரியில் அவள் இல்லை, இல்லை என்று
சொல்லியிருக்கிறார்கள். சுனில் தப்பு செய்து
விட்டான். அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு
அவளையும் ‘ஸ்டூடண்ட் விசா’வில் அழைத்து
வந்திருக்க வேண்டும். இப்போதுகூட ஆயிரம் டாலர்
இருந்தால் போதும். ஒரு நடை இந்தியா போய்
உடனே மாயாவின் வீட்டுக்குப் போய். . .

மாயா! இப்போது மணி 3 ஆகிறது. சரியாக
மூன்றரைக்குப் புறப்படு என்னுடன் வா.

எதுக்கு சுனில்?

கல்யாணம் பண்ணிக்கொள்ள. மாயா, நீயில்லாமல்
எனக்கு பல் தேய்க்கக்கூட உற்சாகமில்லை.
நீ இல்லாமல் அமெரிக்காவே பொலிவிழந்து
கிடக்கிறது. நீயில்லாமல் டெலிவிஷனில்
நாட்டமில்லை. இங்கே கிடைக்கும் புஷ்டி
உணவுகளில் விருப்பமில்லை. மாயா!
நீதான் சகலமும்!

மாயாவின் நினைப்பில் ‘எக்ஸிட்’டைத்
தவறவிட்டு விட்டு இன்னும் பதினைந்து மைல்
போனப்புறம்தான் வழி திரும்ப முடிந்தது.
ப்ரொபஸர் பெர்னார்டு அவன் படிப்பு
ஜாதகத்தைப் பார்த்தார்.

“எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால்
இதுவரை இந்திய மாணவர்களை ரிஸர்ச்
அஸிஸ்டண்டாக எடுத்துக்கொண்டதில்
எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏமாற்றமே.
ஏறத்தாழ ஒரு சைனீஸ் மாணவனைத்
தேர்ந்தெடுத்துவிட்டேன். அவன் இங்கிலீஷ்தான்
இன்னும் புரியவில்லை. மேலும் உன்
‘பயோடேட்டா’வில் அதிகம் புளுகில்லை.
நான் ப்ரபஸர் இர்விங்குக்கு போன் செய்கிறேன்.
ஆறு மாதம் உனக்குக் கொடுக்குமாறு
சொல்லிவிடுகிறேன் . . .”

சுனிலுக்கு உற்சாக அலைபொங்க . . .
“க்ரேட் ஸார்! தாங்க்யூ ஸார். உங்களுக்கு
எவ்வாறு நன்றி சொல்வது என்றே . . .”

“நன்றி வேண்டாம். ஒழுங்காக ப்ராஜெக்டைப்
பல்கலைக்கழகத்தில் முடித்துக் காட்டினால்
போதும். மாதம் ஆயிரம் டாலர் கிராண்ட்டிலிருந்து
அனுப்பப்படும். வெளியே என் செக்ரட்ரியைச்
சந்தித்தால், மேற்கொண்டு விவரங்கள் தருவாள்.
பெஸ்ட் ஆஃப் லக்.”

ஆயிரம் டாலர்! முன்னூறு டாலர் போதும்
சொந்தச் செலவுக்கு. மற்றதெல்லாம் மிச்சப்படுத்தி
இன்னும் இரண்டு மாதங்களில் மாயாவைச்
சந்திக்க ஓர் அவசர ட்ரிப் போய்விட்டு
வந்துவிடலாம் என்று எண்ணிய அதே சமயம்
மாயாவை அடுத்த கட்டத்திற்குத் தயார்ப்
படுத்த அறை மாற்றினார்கள்.

பாப்லோ நெரூதா கவிதைகள்

Image hosted by Photobucket.com

பாப்லோ நெரூதா கவிதைகள்
100 கவிதைகள்
தொகுப்பும் மொழிபெயர்ப்பும் : சுகுமாரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
11 / 29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை 600 018
தொலைபேசி : 91-44-24993448
மின்னஞ்சல் : uyirmmai@gmail.com


நெரூதா அனுபவம்


இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குள் தொடர்ந்து கொண்டிருந்த கனவின் நிறைவேற்றம் இந்த மொழியாக்கம். யார் இந்தக் கனவின்காரணமும் பொருளுமாக இருந்தாரோ அந்தக் கவிஞரின் நூற்றாண்டில் இந்த நூல் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது.
கவிஞனாக எனது ஆதார அக்கறைகளைப் பக்குவப்படுத்தியதிலும் மனிதனாக எனது தார்மீக உணர்வுகளைக் கூர்மைப்படுத்தியதிலும் செல்வாக்குச் செலுத்திய வெவ்வேறு ஆளுமைகளில் நெரூதாவும் ஒருவர் என்பது இந்த மகிழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்குகிறது.
இலக்கியவாசிப்பின் ஆரம்ப நாட்களில் என்னைப் பாதித்த கவிஞர்கள் வரிசையில் பாப்லோ நெரூதா இருக்கவில்லை. அன்றைய வாழ்வனுபவத்துக்கும் மனநிலைக்கும் இணக்கமாகவிருந்தவர் -மற்றொரு ஸ்பானியக் கவிஞரான செஸார் வயெஹோ.
தனி அனுபவத்தின் இருளும் துயரும் இழைந்த வயெஹோவின் கவிதையுலகம் என் இயல்புக்குப் பொருத்தமானதாக இருந்தது. உலகக் கவிதைத் திரட்டுகளில் வாசித்த வயெஹோ கவிதைகளின் பின்னணி விவரங்களில் நெரூதாவின் பெயரும் உடன்நிகழ்வாகத் தொடர்ந்திருந்தது. நெரூதாவை நெருங்க எனக்கு வழிகாட்டியவர் வயெஹோ. பாப்லோ நெரூதா என்ற பெயரைத் தமிழில் நான் பார்த்தது என் பதினாறாவது வயதில்.
’ கண்ணதாசன்’இதழொன்றில் 1973 நவம்பர் அல்லது டிசம்பர் இதழில் தி.க.சிவசங்கரன்
மொழிபெயர்ப்பில் நெரூதாவின் அரசியல் கவிதையன்று வெளியாகியிருந்தது.அப்போதைய அதிபரான நிக்சனையும் சால்வடெர் அலெண்டே தலைமையில் சிலியில் உருவாகியிருந்த ஜனநாயக அரசை அமெரிக்க ஆதரவுடன் கவிழ்த்த பினோஷேவையும் ‘ஓநாய்கள்’என்று சீற்றமான வார்த்தைகளில் குற்றம்சாட்டியது கவிதை. அதே ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி அமெரிக்க ஒத்துழைப்புடன் நடந்த உள்நாட்டுக் கலவரத்தில் அலெண்டே கொல்லப்பட்டார்.அலெண்டே மறைந்த பதின்மூன்றாம் நாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச்
சிகிச்சையிலிருந்த நெரூதாவும் மரணமடைந்தார். மரணத்தின் காரணம், முற்றிய நோய் மட்டுமல்ல; சிலிக்கு நேர்ந்த அரசியல் விபத்தும்தான்.

கவிதையை வாசித்த முதல் வாய்ப்பில் இந்தப் பின்னணி எதையும் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால் அந்த வரிகளிலிருந்த மின்சாரம் சிந்தனையில்
வெளிச்சமாகப் படர்ந்து இன்றும் நீடிக்கிறது.
சுகுமாரன்
(நூலின் முன்னுரையிலிருந்து)
நூலிலிருந்து. . .

என் கவிதையில் கடவுள்
எனது கொடும் விதி,
கடவுள் என் கவிதையில் இருப்பாரென்றால்
நானே கடவுள்
கடவுள் உன் துயரக்கண்களில் இருப்பாரென்றால்
நீயே கடவுள்
நமது இந்த மகத்தான உலகில் எவருமில்லை
நம்மிருவர் முன் மண்டியிட.
மது
நமது பாடலிலிருந்து தொலைவாகவிருப்பதால்
வெளிறிப்போன பெரும் நதியிலிருந்து வந்த,
பூமத்தியரேகையிலிருந்து வந்த,
இலையுதிர்கால மது அல்லது வசந்த மது.
இலைகள் சிதறிக்கிடக்கும் மேஜையருகில்
உடன் அருந்தத் தோழர்கள்.
நான் உற்சாகக் குடிகாரன்.
நீங்கள் இங்கே வந்திருந்தால்,
உங்கள் வாழ்க்கையின் ஒரு துண்டைப் பிய்த்துப்பார்த்திருப்பேன்.
நீங்கள் விடைபெறும்போது
எனக்குச் சொந்தமான எதையேனும்,
தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளும் எதையேனும்,
நீங்கள் எடுத்துச்செல்லலாம் . . .
கொஞ்சம் ரோஜாக்கள்,கொஞ்சம் அத்திப்பழங்கள்
அல்லது
சீக்கிரம் எரியும் சில வேர்களை.
நமது மதுக்கோப்பைகள் கவிழ்ந்து ஒழுகி
மேஜை சிவப்பாகும்வரை
நீங்கள் என்னோடு பாடிக்கொண்டிருக்கலாம்.
உங்கள் உதடுகளுக்கான இந்த மது
தூசிபடிந்த திராட்சைக்குலைகளிலிருந்தே
நேரடியாக வந்திருக்கிறது.
எனது பாடலின் எத்தனை சாயல்கள் மாறிப்போயின.
எனது பழைய தோழர்களே!
முகத்தோடு முகமாக நேசித்தேன் நான்.
வெளியே கடினமும் உள்ளே கனிவுமான
பழங்களின் தோட்டம் என் வாழ்க்கை.
எனது வீரிய விஞ்ஞானத்தை என் வாழ்க்கையிலிருந்தே ஒருமையுடன் வடித்தெடுத்தேன்.
உனது கையைக் கொடு
என்னுடன் சும்மா வா.
எனது சொற்களில் எதையும் தேடவேண்டாம்
ஒரு செடியின் கசிவைவிட அதில் அதிகமொன்றுமில்லை.
ஒரு தொழிலாளியிடம் எதிர்பார்ப்பதைவிட
என்னிடம் ஏன் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்?
மண்ணில் அடுக்கியடுக்கி
எனது பட்டறையை நானே உருவாக்கினேனென்று
உங்களுக்குத் தெரியும்.
எனது நாவைத் தவிர
வேறொன்றால் நான் பேசுவதில்லையென்றும்
உங்களுக்குத் தெரியும்.
இந்தக் காற்றைத் தாங்கமுடியாதென்றால்
மருத்துவரைத் தேடிப்போங்கள்.

பூமியின் முரட்டுமதுவைப் புகழ்ந்து பாடுவோம்
இலையுதிர்காலக் கோப்பைகளால் மேஜைமேல் தாளமிடுங்கள்
ஒரு கித்தார் அல்லது மௌனம்
மறைந்துபோன நதிகளின் மொழியில் அல்லது
பொருளற்ற கண்ணிகளால்
நமது நேசத்தின் வரிகளைப் பாடிக்கொண்டிருக்கட்டும்;
பாடட்டும்.
மொழிபெயர்ப்பாளர்

சுகுமாரன் 1957 ஜூன் 11 கோயம்புத்தூரில் பிறந்தார். கவிதைகளுடன்
கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
நான்கு கவிதைத் தொகுப்புகள் (கோடை காலக் குறிப்புகள்,
பயணியின் சங்கீதங்கள், சிலைகளின் காலம், வாழ்நிலம்)
ஒரு கட்டுரைத் தொகுப்பு (திசைகளும் தடங்களும்),
மூன்று மொழியாக்க நூல்கள்
(மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம்),
வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதை),
இதுதான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல்)
கவிதையின் திசைகள் (உலகக் கவிதைகள்) ஆகியவை வெளியாகியுள்ளன.

தற்போது திருவனந்தபுரத்தில் மலையாளத் தொலைக்காட்சியான
சூர்யா டி.வியில் பணியாற்றி வருகிறார்.

Thursday, April 07, 2005

உயிர்மை பதிப்பகம்

உயிர்மை பதிப்பகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. எமது வெளியீடுகள் பற்றிய விபரங்கள், விவாதங்கள் தொடரும்.

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்